சித்தராமையா டெல்லி சென்றார்; மேலிட தலைவர்களை இன்று சந்திக்கிறார்
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று டெல்லி சென்றார். காங்கிரஸ் மேலிட தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார்.
பெங்களூரு: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று டெல்லி சென்றார். காங்கிரஸ் மேலிட தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார்.
அடுத்த முதல்-மந்திரி
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 2023-ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் காங்கிரசில் சித்தராமையாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலர், காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
இதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் டெல்லிக்கு சென்று மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தார். அடுத்த முதல்-மந்திரி யார் என்ற விவகாரத்தில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சித்தராமையா டெல்லி பயணம்
இந்த நிலையில் கட்சி மேலிடத்தின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். அப்போது முதல்-மந்திரி விவகாரம் குறித்து அவரிடம் மேலிட தலைவர்கள் கருத்து கேட்க உள்ளதாகவும், காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றிணைந்து சட்டசபை தேர்தலை சந்திக்கும்படி உத்தரவிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இடைத்தேர்தல்
டெல்லி புறப்படும் முன் அவர் பெங்களுருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றப்படுகிறார் என்ற தகவலை பா.ஜனதா தலைவரே கூறியுள்ளார். ஊழல்வாதியான எடியூரப்பா பதவியை விட்டு விலகுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதனால் கர்நாடக சட்டசபைக்கு உடனே தேர்தல் வரும் என்று கூற முடியாது. எடியூரப்பாவுக்கு பதிலாக வேறு ஒருவரை பா.ஜனதா முதல்-மந்திரியாக நியமிக்கும். ஒருவேளை சட்டசபைக்கு இடைக்கால தேர்தல் வந்தால் அதை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது. எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் அழைப்பின் பேரில் டெல்லி செல்கிறேன். என்ன காரணம் என்பது எனக்கு தெரியாது. தலைவர்களை நேரில் சந்தித்து பேசிய பிறகு தெரிவிக்கிறேன்" என்றார்.
Related Tags :
Next Story