பாதை தடுப்பை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் மறியல்


பாதை தடுப்பை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 20 July 2021 2:56 AM IST (Updated: 20 July 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அருகே பாதை தடுப்பை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாமரைக்குளம்:

அரியலூர் நகரையொட்டியுள்ள விரிவாக்க பகுதியான ராவுத்தன்பட்டியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்திற்கும், அரியலூர் நகருக்கும் இடையே புறவழிச்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த சாலையை விரிவாக்கம் செய்வதாக கூறி, தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதனால் அரியலூர் நகரில் இருந்து ராவுத்தன்பட்டிக்கு செல்லும் மற்றும் ராவுத்தன்பட்டியில் இருந்து அரியலூர் நகருக்கு வரும் பாதை தடுக்கப்பட்டு, சுற்றி வரக்கூடிய சூழ்நிலை உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் அந்த வழியாக வரும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுவதாக கூறியும், பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்று கூறியும், மைய தடுப்பை அகற்ற வலியுறுத்தி நேற்று அந்த கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு மதன் மற்றும் ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிய தீர்வு கிடைக்கும் வரை சாலை பணி நடைபெறுவதை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். அப்போது, இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். மறியலால் பெரம்பலூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story