2020-ல் கொரோனாவால் முடங்கிபோனது: ஓராண்டாக குடோன்களில் 10 ஆயிரம் சிலைகள் தேக்கம்-விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்படுமா? என எதிர்பார்ப்பு


2020-ல் கொரோனாவால் முடங்கிபோனது: ஓராண்டாக குடோன்களில் 10 ஆயிரம் சிலைகள் தேக்கம்-விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்படுமா? என எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 20 July 2021 4:04 AM IST (Updated: 20 July 2021 4:04 AM IST)
t-max-icont-min-icon

2020-ல் ஏற்பட்ட கொரோனாவால் தேவூர் அருகே ஓராண்டாக குடோன்களில் 10 ஆயிரம் சிலைகள் தேக்கமடைந்துள்ளன. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்படுமா? என்று சிலை உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தேவூர்:
2020-ல் ஏற்பட்ட கொரோனாவால் தேவூர் அருகே ஓராண்டாக குடோன்களில் 10 ஆயிரம் சிலைகள் தேக்கமடைந்துள்ளன. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்படுமா? என்று சிலை உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். 
விநாயகர் சதுர்த்தி
சேலம் மாவட்டம் தேவூர் அருகே காவேரிபட்டி ஊராட்சியில் உள்ளது மோட்டூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விநாயகர் சிலைகளை தயாரித்து, அதனை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். 
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சேலம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் இங்கு தயாரிக்கப்படும் சிலைகளை வாங்கி சென்று வழிபாடு நடத்துவார்கள். மேலும் வியாபாரிகளும் சிலைகளை வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம்.
கிரிக்கெட் வீரர் கணபதி
இந்தநிலையில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விற்பனை செய்ய மரவள்ளிக்கிழங்கு மாவு, காகிதக்கூழ், கல்நார் பேப்பர், மரக்குச்சிகள், உணவு தானியங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களை பயன்படுதி சிலைகள் தயாரிக்கப்பட்டன. 
ராஜகணபதி, மயில் வாகன கணபதி, சிங்க வாகன கணபதி, ஆதி சேச கணபதி, பாகுபலி விநாயகர், குடும்ப விநாயகர், கருடாழ்வார் விநாயகர், காமதேனு விநாயகர் மற்றும் கிரிக்கெட் வீரர் கணபதி உள்பட பல்வேறு வகைகளில், விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டன. அவை பல்வேறு வண்ணங்கள் தீட்டப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டன.
10 ஆயிரம் சிலைகள் தேக்கம்
ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், பொது இடங்கள், தனி நபர் இடங்களில் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தவும், அதனை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்தது.
இந்த தடையால் விநாயகர் சிலைகளை வாங்க பக்தர்களோ, வியாபாரிகளோ முன்வரவில்லை. இதனால் சுமார் 10 ஆயிரம் விநாயகர் சிலைகள் தேக்கமடைந்தன. விற்பனையாகாமல் சிலைகள் தேக்கமடைந்துள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
அனுமதி
கொரோனா தொற்று பரவலால் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ரத்து செய்யப்பட்டதன் காரணமாக குடோன்களில் 10 ஆயிரம் விநாயகர் சிலைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் பல லட்சம் ரூபாய் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி கிடக்கும் சிலைகள் பலவற்றை எலிகள் கடித்து சேதப்படுத்தி உள்ளன. 
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் மாதம் 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே வாழ்வாதாரத்தை இழந்து நஷ்டத்தில் தவித்து வரும் எங்களுக்கு உதவும் வகையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, ஊர்வலம் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் எதிர்பார்ப்புடன் கூறினர்.


Next Story