எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு ஆலோசனை: சசிகலாவின் பொய்யான தகவலை மக்கள் நம்ப தயாராக இல்லை-சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறும் சசிகலாவின் பொய்யான தகவலை மக்கள் நம்ப தயாராக இல்லை என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேச்சேரி:
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறும் சசிகலாவின் பொய்யான தகவலை மக்கள் நம்ப தயாராக இல்லை என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கொரோனா நிவாரண பொருட்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களுக்கு காய்கறி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனர். தற்போது அதற்கு மாறாக ஒரு குழு அமைத்து, விவரங்கள் பெற்று அதன் அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து வருகிறார்கள். இதனால் இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்று நான் கேள்வி எழுப்பி இருந்தேன். நீட் தேர்வு விவகாரத்தில் திட்டமிட்டு பொய்யான வாக்குறுதி கொடுத்து தி.மு.க.வினர் மக்களை ஏமாற்றி உள்ளனர்.
மேகதாது அணை
ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி காவிரி விவகாரத்தில் நல்ல தீர்ப்பை பெற்று கொடுத்தார். அதன்படி சுப்ரீம் கோர்ட்டு காவிரி ஆற்றில் தண்ணீரை தேக்கவும், தடுக்கவும் கூடாது என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் கர்நாடக அரசு தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுக்க வேண்டுமென்றே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கூறி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். குறிப்பாக காவிரி ஆற்றை குடிநீர் ஆதாரமாக கொண்ட 16 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படும்.
வேண்டுமென்றே வீணடிக்கவில்லை
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. அப்போது பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ? என்று அச்சப்பட்டனர். எதிர்க்கட்சிகளும் மேலும் அச்சத்தை ஏற்படுத்தின. ஒரு குப்பி கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை 10 பேருக்கும், கோவேக்சின் மருந்தை 20 பேருக்கும் வழங்க முடியும்.
அச்சம் காரணமாக பொதுமக்கள் முன்வராத காரணத்தால் தான் தடுப்பூசி மருந்துகள் குறைந்த அளவு போடப்பட்டு வீணானது. வேண்டுமென்றே நாங்கள் தடுப்பூசிகளை வீணடிக்கவில்லை.
வெள்ளை அறிக்கை
கொரோனா 3-வது அலை வரும் என்று நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த அலை வருவதற்கு முன்பு தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு அதனை தடுக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட தடுப்பூசிகள் எவ்வளவு என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தடுப்பூசி போடும் மையங்களில் 100 மருந்துகள் உள்ள நிலையில் ஆயிரம் பேர் குவிந்து வருகிறார்கள். இதனால் தடுப்பூசி செலுத்தி கொள்ள முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர். அவர்களின் நேரம் விரயமாகி வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.
பொய்யான தகவல்
சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பலமுறை கூறிவிட்டோம். அது குறித்து தெளிவுபடுத்தி விட்டோம். சசிகலா, அ.தி.மு.க.வில் இருந்த காலக்கட்டத்திலும், தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளோம். அவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறி வருகிறார்.
அவரின் பொய்யான தகவலை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை. எவ்வளவு தவறான கருத்துகளை பரப்பினாலும் அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story