மண்புழு உரம் மூலம் விவசாயிகள் பயனடையலாம்
மண்புழு உரம் மூலம் விவசாயிகள் பயனடையலாம் என்று உடுமலை தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டியுள்ளனர்.
போடிப்பட்ட
மண்புழு உரம் மூலம் விவசாயிகள் பயனடையலாம் என்று உடுமலை தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டியுள்ளனர்.
ரசாயன உரங்கள்
கால்நடைக்கழிவுகள், பண்ணைக்கழிவுகள் போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும்போது மண்ணிலுள்ள நன்மை தரும் நுண்ணுயிரிகள் பல்கிப்பெருகி மண்ணை வளமாக்கின. அத்துடன் மண்ணிலுள்ள மண்புழுக்கள் மூலம் கிடைக்கும் இயற்கை உரமானது மண்வளத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது.
மண்புழுக்கள் மண்ணுக்குள் தொடர்ச்சியாக பயணம் செய்து மண்ணை காற்றோட்டமிக்கதாக மாற்றுகிறது. இதனால் மண் தண்ணீரையும் சத்துக்களையும் ஈர்த்துக்கொள்வதற்கு ஏதுவாக மாறுகிறது. இத்தனை நன்மைகளைக் கொண்ட மண்புழுக்களை இன்று விளைநிலங்களில் பார்க்க முடிவதில்லை என்பது வேதனையான உண்மையாகும்.
மண்வளத்தை மீட்டெடுக்க
ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளின் பயன்பாட்டால் மண் புழுக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் வாழவதற்குத் தகுதியற்றதாக நமது மண் மாறி வருகிறது. இந்த சூழலில் மண் வளத்தை மீட்டெடுக்க இயற்கை விவசாயத்துக்குத் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் மண்வளத்தை மீட்டெடுக்க மண்புழு உரங்கள் பெருமளவில் கைகொடுக்கிறது. நமது நிலம் மண்புழுக்கள் வளர்வதற்குத் தகுதியற்றதாக மாறியிருந்தாலும் மண்புழுக்களை தொட்டிகள் மற்றும் கூடாரங்கள் அமைத்து வளர்த்து அதன் மூலம் மண்புழு உரம் தயாரித்துப் பயன்படுத்த முடியும். தற்போது அரசு மண்புழு வளர்ப்புக்கென பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
உழவர்களின் நண்பன்
இதுகுறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-
மண் புழுக்களை உழவர்களின் நண்பன் என்று சொல்வார்கள். மண்ணின் மைந்தர்களான மண்புழுக்கள் இந்த பூமியில் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை மண்ணில் இடப்படும் கழிவுகளை மக்கச் செய்து உரமாக்கி பயிர்கள் நன்கு கிரகித்துக்கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. மேலும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மண்ணிலுள்ள சத்துக்களான நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்றவை பயிர்களுக்குக் கிடைக்கிறது. மேலும் நோய் உண்டாக்கும் கிருமிகளின் எண்ணிக்கையும் கட்டுக்குள் வருகிறது. எனவே மண்புழு உரம் தயாரித்து பயிர்களுக்கு வழங்க விவசாயிகள் முன்வர வேண்டும்.
மண்புழு உரம் தயாரிப்பில் மண்புழுக்களின் தேர்வு முக்கிய இடம் பிடிக்கிறது. மண் புழுக்களில் ஆயிரக்கணக்கான ரகங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட சில ரகங்களே உரம் தயாரிப்புக்குப் பயன்படுகிறது. நாம் தேர்ந்தெடுக்கும் மண் புழுக்கள் எல்லா சூழ்நிலையிலும் வளரும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் அதிக எண்ணிக்கையில் குஞ்சுகளை உற்பத்தி செய்ய வேண்டும். அத்துடன் அதிக செரிமானத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். ண்புழு உரம் தயாரிப்புக்கென இல்லாமல் நேரடியாக விளைநிலங்களில் வளரச்செய்வதற்கு உள்ளூர் வகை மண்புழுக்களைப் பயன்படுத்தலாம்.
தொழில் நுட்பங்கள்
இது மண்ணின் வளத்தையும் சூழலையும் மேம்படுத்த உதவுகிறது. மண் புழுக்களில் மண்ணின் மேற்பரப்பில் வாழக்கூடிய எபிஜிக் வகை, மண்ணின் மேற்பரப்பிலிருந்து 30 செமீ ஆழத்தில் வாழக்கூடிய எண்டோஜிக் வகை மற்றும் மண்ணுக்குள் 3 மீட்டர் ஆழம் வரை வசிக்கும் அனிஸிக் வகை உள்ளது.
பொதுவாக உரம் தயாரிப்புக்கு உகந்ததாக மண்ணின் நிலப்பரப்பின் மேல் வளர்ந்து குறுகிய கால இடைவெளியில் அதிக அளவில் உரம் மற்றும் புழுக்களை உற்பத்தி செய்யும் ஆப்பிரிக்க வகை மண் புழுக்களான யூடிரில்லஸ், யூஜினியே மற்றும் ஐரோப்பியன் சிவப்பு மண்புழுவான எய்சினியா போய்டிடா ஆகியவை உள்ளது. உடுமலை வட்டாரத்தில் மண் புழு உரம் தயாரிக்க விரும்பும் விவசாயிகள் மானியத் திட்டங்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ள உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story