ஸ்மார்ட் உடுமலை திட்டம்


ஸ்மார்ட் உடுமலை திட்டம்
x
தினத்தந்தி 20 July 2021 4:45 PM IST (Updated: 20 July 2021 4:45 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையை, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சீர்மிகு நகரமாக மாற்ற தொலைநோக்கு வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் ‘ஸ்மார்ட் உடுமலை திட்டம்’ கொண்டு வர மாவட்ட சுற்றுலா அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

உடுமலை, 
உடுமலையை, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சீர்மிகு நகரமாக மாற்ற தொலைநோக்கு வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் ‘ஸ்மார்ட் உடுமலை திட்டம்’ கொண்டு வர மாவட்ட சுற்றுலா அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
உடுமலை பகுதி
உடுமலையில் இருந்து 21 கி.மீ.தூரத்தில் அமராவதி அணை,  பூங்கா, முதலைப்பண்ணை மற்றும் படகு இல்லம் ஆகியவை உள்ளது. அதேபோன்று உடுமலையில் இருந்து பள்ளபாளையம், தளி வழியாக 21 கி.மீ.தூரத்தில் திருமூர்த்தி மலை, மலைபகுதியில் பஞ்சலிங்கம் நீர்வீழ்ச்சி, மலை அடிவாரத்தில் புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவையும், திருமூர்த்திமலையை ஒட்டி திருமூர்த்தி அணை, அணைப்பகுதியில் நீச்சல் குளம், சிறுவர் பூங்கா ஆகியவையும் உள்ளது.
 அதேபோன்று கேரள மாநிலம் மூணாறு செல்லும் வழியில், தமிழ் நாடு எல்லையான சின்னாறு பறவைகள் அதிகம் வாழும் குட்டி பறவைகள் சரணாலயமாக உள்ளது. உடுமலையில் இருந்து திருமூர்த்தி மலை, அமராவதி அணை மற்றும் சின்னாறு பகுதிகளுக்கு செல்லும் வழியில் குளிர்ந்த காலநிலையில், இயற்கை எழில் சூழ்ந்துள்ள காட்சிகளை காணலாம்.
உடுமலையில் இருந்து கிழக்கு திசையில் 35 கி.மீ. தூரத்தில் முருகன் கோவிலும், தென்மேற்கு திசையில் 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஆனைமலையில் மாசாணியம்மன் கோவிலும், அதையடுத்து ஆழியாறு அணை, பூங்கா, குரங்கு நீர்வீழ்ச்சி ஆகியவையும் உள்ளது. வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உடுமலை வழியாக, மலைப்பிரதேச சுற்றுலா பகுதியான வால்பாறை, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கும் சென்று வருகின்றனர்.
ஸ்மார்ட் உடுமலை திட்டம்
இத்தகைய சிறந்த, புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் உடுமலையை சுற்றியுள்ள பகுதியில் உள்ளதால் உடுமலை வழியாக தினசரி அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதனால் உடுமலை பகுதியை மற்ற மாநிலங்கள் மற்றும் மாவட்ட சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைத்து சுற்றுலா மூலம் அதிக வருவாய் ஈட்டவும், உடுமலை பகுதி பொதுமக்களின் நலனுக்காகவும் உடுமலை நகரத்தை சீர்மிகு நகரமாக மாற்றுவதற்கு, தொலைநோக்கு வளர்ச்சி திட்டம் அடிப்படையில் சுற்றுலா துறை நிதி உதவியுடன் ‘ஸ்மார்ட் உடுமலை திட்டம்’ கொண்டு வர திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் உடுமலை நகராட்சி நிர்வாகம் ஆகியவை திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆலோசனை கூட்டம் மற்றும் கள ஆய்வுப்பணி மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்த்குமார் தலைமையில் நடந்தது. இதில் ஸ்மார்ட் உடுமலை திட்டத்தின்படி உடுமலை நகர பகுதியில் தீம் பார்க், நீச்சல் குளம், செல்பீ ஸ்பாட், எழில் உடுமலை, நடைபயிற்சி மேற்கொள்ள ஸ்மார்ட் நடைபாதை, புதிய சிறுவர் பூங்காக்களை உருவாக்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய திட்டப்பணிகளுக்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதிகாரிகள்
இந்த ஆய்வு கூட்டம் மற்றும் களஆய்வுப்பணியின் போது உடுமலை நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி பொறியாளர் தங்கராஜ், உடுமலை சுற்றுலா வளர்ச்சிக்குழு எம்.மத்தீன் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் உடனிருந்தனர். ஸ்மார்ட் உடுமலை திட்டத்தில் பணிகளை மேற்கொள்வது குறித்து உடுமலை நகராட்சி நிர்வாகம் முன்மொழிவு அனுப்பிய பிறகு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்த்குமார் தெரிவித்தார்.

-

Next Story