கும்மிடிப்பூண்டி அருகே வீடுகளில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து மின் மீட்டர்கள் வெடித்து சிதறின
கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் வீடுகளுக்கு திடீரென உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால் 50-க்கும் மேற்பட்ட மின் மீட்டர்கள் வெடித்து தீ பிடித்து எரிந்தன.
மின் மீட்டர்கள்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சிக்கு உட்பட்டது தண்டலம் கிராமம். இங்கு சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் இப்பகுதியில் மின்கம்பத்தில் உள்ள உயர் மின் அழுத்த வயர்கள் திடீரென அறுந்து அதற்கு கீழே அதே கம்பத்தில் இருந்த வீட்டு இணைப்புகளுக்கான வயர்களின் மீது விழுந்தன. இதனையடுத்து அந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் திடீரென உயர் அழுத்த மின்சாரம் திடீரென பாய்ந்தது. தீப்பொறியுடன் மின்வயர்களும் தரையில் அறுந்து விழுந்தன. இத்தகைய சூழலில், அந்த கிராமத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் நள்ளிரவில் மின் மீட்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் பதட்டம் அடைந்த கிராம மக்கள் தங்களது வீட்டை விட்டு அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
கிராம மக்கள் அவதி
மேலும் பலரது வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப்பொருட்களும் முழுமையாக சேதம் அடைந்தன. அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏதுமில்லை. இரவு முழுவதும் மின்தடையால் கிராம மக்கள் அவதி அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த சிப்காட் மின்துறை உதவி செயற்பொறியாளர் முரளி, எளாவூர் உதவி பொறியாளர் குமார், ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் ஆகியோர் பழுதடைந்த அனைத்து மின் மீட்டர் மற்றும் மின்வயர்களை புதிதாக மாற்றி தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக மீட்டர் இன்றி நேரிடையான மின்சப்ளை வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story