திண்டுக்கல் பஸ்நிலையத்தில் மக்கும் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கும் பூங்கா


திண்டுக்கல் பஸ்நிலையத்தில் மக்கும் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கும் பூங்கா
x
தினத்தந்தி 20 July 2021 7:25 PM IST (Updated: 20 July 2021 7:25 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் மக்கும் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கும் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

திண்டுக்கல் :
திண்டுக்கல் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் பஸ்நிலையம் பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை கொண்டு அங்கேயே உரம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான நுண்உரம் தயாரிக்கும் பூங்கா அமைக்கும் இடத்தை, மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் பார்வையிட்டார். மேலும் பஸ் நிலைய கடைகளிலும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது மாநகராட்சி பகுதியில் தமிழக அரசு தடை செய்துள்ள 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வணிக நிறுவனங்களில் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனி தொட்டிகளில் சேகரித்து வைத்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும். அதை மேற்கொள்ளாத நிறுவனங்களை அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் வீடுகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக சேமித்து வைத்து வழங்க வேண்டும். தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநகர் நலஅலுவலர் லட்சியவர்ணா, சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.



Next Story