ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த திருடன் கைது


ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த திருடன் கைது
x
தினத்தந்தி 20 July 2021 10:13 PM IST (Updated: 20 July 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடனை போலீசார் கைது செய்தனர். திருடிய பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்த அவரிடமிருந்து 75 பவுன் நகை, கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருக்கோவிலூர் அருகே மாடாமுண்டி கூட்டுரோட்டில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். 

8 ஆண்டுகளாக திருட்டு

விசாரணையில் அவர், திருக்கோவிலூர் அருகே வடகரைதாழனூரை சேர்ந்த காசிநாதன் மகன் காமராஜ் (வயது 46) என்பதும், இவர்  கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.  குறிப்பாக திருக்கோவிலூர் பகுதியில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு 10 இடங்களில் கைவரிசை காட்டி வந்ததும், காமராஜ் கடந்த 8 ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் நகை, பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 

நகைகள், கார்கள் பறிமுதல்

மேலும் அவரிடம் இருந்து 75 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.25 ஆயிரம் ரொக்கம், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. 
இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்து, காமராஜிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார், நகைகளை பார்வையிட்டார். பின்னர், காமராஜை கைது செய்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், அகிலன், அன்பழகன், திருமால், ராஜசேகரன், ஜெயச்சந்திரன், உலகநாதன், குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீஸ்காரர்கள் சிவஜோதி, அசோக்குமார் ஆகியோரை கொண்ட தனிப்படை போலீசாரை பாராட்டினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கூறுகையில், கைதான காமராஜிடம் இருந்து  இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களை தவிர மேலும் திருட்டு தொழில் மூலம் சம்பாதித்து அவர் சேர்த்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒவ்வொரு ஊரிலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்தால் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றார்.

Next Story