திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை


திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 20 July 2021 10:15 PM IST (Updated: 20 July 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த ஆவணிப்பூர் மேட்டுதெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 57). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி பூமாதேவி(45), மகன் சந்திரசேகர்(26) ஆகியோருடன் அருகே உள்ள சேந்தமங்கலம் காளியம்மன் கோவிலுக்கு சென்று இருந்தார். 

இரவு அங்கு நடந்த மேடை நாடகத்தை பார்த்து விட்டு, அதிகாலை வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்குள்ள அறைக்குள் சென்று பார்த்தனா்.

அப்போது, பீரோ கதவு திறந்த நிலையில் கிடந்தது. மேலும் அதில் இருந்த ரூ.10 ஆயிரம், 1¼ பவுன் நகை, 505 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியன கொள்ளை போயிருந்தது. கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.80 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மின்வாரிய அதிகாரி

இதேபோல் மரக்காணம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி காயத்திரி (34). இவர் ஆவணிப்பூர் மின்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தவர். இதற்காக தற்போது ஆவணிப்பூர் மேட்டுத்தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். 

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மரக்காணத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், இவர் ஆவணிப்பூரில்  தங்கியிருந்த வாடகை வீட்டின் கதவை நேற்று முன்தினம் மர்ம ஆசாமிகள் உடைத்து உள்ளே புகுந்து  திருட முயற்சி செய்துள்ளனர். 

அங்கு நகை, பணம் என்று எதிவும் கிடைக்காததால், அவர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் பீரோவில் இருந்த துணிகள் அனைத்தையும் வெளியே அள்ளி போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story