விழுப்புரம் மாவட்டத்தில் கனிம கடத்தல் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை கண்காணிப்பு குழுவினருக்கு கலெக்டர் மோகன் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் கனிம கடத்தல் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கண்காணிப்பு குழுவினருக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான மணல் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டவிரோதமாக கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் மாதம் ஒரு முறையும், வட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் மாதம் இரு முறையும் நடத்தப்பட்டு வருகிறது. வட்ட அளவிலான கூட்டத்தில் விவாதிக்கப்படும் தகவலானது மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவிற்கு தவறாமல் தகவல் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
வட்ட அளவிலான கண்காணிப்பு குழுவானது தங்களது பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அதிக கனிம கடத்தல் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அவ்விடங்களில் தொடர் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் கனிம கடத்தல் தொடர்பாக வரப்பெறும் புகார்கள் மீது உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தீவிர கண்காணிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் செங்கல் சூளைகள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தி பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல் குவாரிகளில் வெடிபொருட்கள் முறையான அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை வட்ட மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
மேலும் கல் குவாரிகளில் வெடி வைப்பதற்கு முன் முறையான எச்சரிக்கையினை குவாரி உரிமையாளர்கள் மேற்கொள்கின்றனரா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சுந்தரராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story