பெண்கள் உள்பட 1,128 மீனவர்கள் மீது வழக்கு


பெண்கள் உள்பட 1,128 மீனவர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 July 2021 10:20 PM IST (Updated: 20 July 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி கடலூரில் போராட்டம் நடத்திய பெண்கள் உள்பட 1,128 மீனவர்கள் மீதும், படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராடிய 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்த மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் ஒரு சில கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வந்தனர். இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலையை பயன்படுத்திய மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கினர். இதையடுத்து மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று முன்தினம் கடலூர் தேவனாம்பட்டினத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மீனவ பெண்கள் மட்டும் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடலூர் பாரதிசாலை, சில்வர் பீச் ரோடு சிக்னல் பகுதியில் அமர்ந்து தொடர்ந்து 10 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலில் இறங்கி போராட்டம்

இதேபோல் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி கடலூர் முதுநகர் ராசாப்பேட்டை கடற்கரையிலும் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தேவனாம்பட்டினத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும், பாரதி சாலையில் சாலை மறியல் செய்ய சென்ற போது, அதை தடுத்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், போலீசாரை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும், ஊர் தலைவர் ஏகாம்பரம், வேல்முருகன், அருள், கவியரசன், கார்த்திக், சேகர், கருணாநிதி, ரகு, விஜயகுமார், செல்வம் மற்றும் 200 பெண்கள் உள்பட 720 பேர் மீது தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தவிர கடலூர் பாரதி சாலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தும் சாலை மறியல் செய்ததாக தலைவர் ஏகாம்பரம், வேல்முருகன், வேணி மற்றும் 199 பெண்கள் என 202 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1,128 பேர் மீது வழக்கு

கடலூர் ராசாப்பேட்டை கடலில் இறங்கி போராட்டம் நடத்த சென்றவர்களை தடுத்த போலீசாரை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பணி செய்ய விடாமல் தடுத்தும், கொரோனா விதிமுறைளை மீறி கூட்டம் கூடியதாக ஊர்த்தலைவர் வீரப்பன், தணிகாசலம், ஆறுமுகம் உள்பட 206 பேர் மீது என மொத்தம் 300 பெண்கள் உள்பட 1,128 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தவிர மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட மசோதாவை எதிர்த்து கடலூர் துறைமுகத்தில் விசைப்படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்திய விஜயவீரன் உள்பட 10 பேர் மீது துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story