ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு திட்ட பணிகள்


ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு திட்ட பணிகள்
x
தினத்தந்தி 20 July 2021 10:25 PM IST (Updated: 20 July 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 70 லட்சத்தில் திட்டப் பணிகள் செய்ய உள்ள இடங்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

வாணியம்பாடி

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 70 லட்சத்தில் திட்டப் பணிகள் செய்ய உள்ள இடங்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார். 

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியை சுற்றுலா தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அங்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர், தற்போது பெய்து வரும் மழையால் அருவி பகுதியில்  தண்ணீர் கொட்டி வருகிறது, இங்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து,  கலெக்டர் அமர் குஷ்வாஹா மற்றும் செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வருவாய்த்துறையினர், வனத்துறை அதிகாரிகளுடன் சென்று அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

சிறுவர் பூங்கா

சுற்றுலாதல மேம்பாடு திட்டத்தின் கீழ் அந்த பகுதியில் பெண்களுக்காக தனி கழிப்பறைகள், சமுதாய கூடம் மற்றும் முருகர் கோவில் பகுதிகளில் சிமெண்டு பிளவர்பிளாப் சாலை, ஜலகாம்பாறை கிராமம் முதல் மலையடிவாரம் வரை மின்விளக்குகளும், கோவில் அருகே சோலார் விளக்கு ஒன்றும் அமைத்திடவும், பயணிகள் நிற்பதற்காக நிழற்குடம், சிறுவர் பூங்கா, படிக்கட்டுகள் பக்கவாட்டில் தடுப்பு சுவர்கள் அமைக்கவும், சிறு பாலம் கட்டவும், வணிக வளாகங்கள் அமைக்கவும், சுற்றி தடுப்பு சுவர் அமைக்கும் நீர் வீழ்ச்சி பகுதியில் முட் கம்பிகள் அமைக்கவும் ரூ.1 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 


அதேபோல் ஏழருவி பகுதியில் கழிப்பிடம், சமுதாயக்கூடம், முள்வேலி அமைத்தல் ஆகிய பணிகளுக்காக ரூ.36 லட்சம் நிதி ஒதுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, இதற்காக மொத்தம் ரூ.1 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது, 

இதனை வனத்துறையின் அனுமதியுடன் செயல்படுத்தப் பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இப்பணிகள் கலெக்டர் அமர்குஷ்வாஹா, செந்தில் குமார் எம்.எல்.ஏ.  உதவி வனப் பாதுகாப்பு அதிகாரி ராஜ்குமார், வனச்சரக அலுவலர் பிரபு ஆகியோர் ஆய்வு செய்தனர். 


Next Story