2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு 26-ந் தேதி நடக்கிறது
கடலூர்,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் நடத்தப்படும் காவல்துறை 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி நடந்தது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 23 ஆயிரத்து 179 ஆண்களும், 5 ஆயிரத்து 450 பெண்களும் மூன்றாம் பாலினத்தவர் 11 பேரும் என மொத்தம் 28 ஆயிரத்து 640 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 25 ஆயிரத்து 876 பேர் தேர்வு எழுதியதில், 2 ஆயிரத்து 748 ஆண்களும், 1,045 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ஆயிரத்து 794 பேருக்கும், கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி உடற்தகுதி தேர்வு நடைபெற இருந்தது. இதற்காக காவல்துறை சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால், 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் வருகிற 26-ந் தேதி முதல் உடற்தகுதி தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. அதாவது கயிறு ஏறுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்த உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.
இதையொட்டி உடற்தகுதி தேர்வில் இளைஞர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக, கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கயிறு ஏறுதல் போட்டிக்காக, மைதானத்தில் கம்பிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
Related Tags :
Next Story