தேங்கி கிடக்கும் பேரிக்காய்கள் குன்னூர் பழவியல் நிலையத்துக்கு விற்கப்படுகிறது
ஊட்டி தேயிலை பூங்காவில் தேங்கி கிடக்கும் பேரிக்காய்கள் குன்னூர் பழவியல் நிலையத்துக்கு விற்கப்படுவதாக அதிகாரி தெரிவித்தார்.
ஊட்டி
ஊட்டி தேயிலை பூங்காவில் தேங்கி கிடக்கும் பேரிக்காய்கள் குன்னூர் பழவியல் நிலையத்துக்கு விற்கப்படுவதாக அதிகாரி தெரிவித்தார்.
பேரிக்காய் சீசன்
நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டாவில் தோட்டக்கலை துறையின் தேயிலை பூங்கா உள்ளது. இந்த பூங்கா 10 ஏக்கர் பரப்பளவை கொண்டது.
அதில் 6 ஏக்கர் தேயிலை தோட்டங்கள் நடுவே சில்வர் ஓக் மரங்கள், 165 பேரிக்காய் மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் பேரிக்காய் சீசனாக உள்ளது.
இங்கு கடந்த மாதம் முதல் பேரிக்காய் காய்க்க தொடங்கியது. வழக்கமாக பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பேரிக்காய் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பேரிக்காய்களை வாங்கி செல்வார்கள்.
தேக்கம் அடைந்தது
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் பூங்கா மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வுகள் அறிவித்தும் சுற்றுலா மையங்கள் திறக்க அனுமதி இல்லை.
இதன் காரணமாக பேரிக்காய் விளைச்சல் அதிகமாக இருந்தும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்தது.
எனவே பேரிக்காய் வீணாகாமல் இருக்க குன்னூரில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பழவியல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பூங்கா மேலாளர் ரமேஷ் கூறியதாவது:-
1½ டன் விற்பனை
தற்போது ஒரு கிலோ பேரிக்காய் ரூ.85 விலை கிடைக்கிறது. குன்னூர் பழவியல் நிலையத்தில் ஜூஸ் உற்பத்திக்காக பூங்காவில் பறிக்கப்படும் பேரிக்காய் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
1½ டன் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டைவிட தற்போது விலை அதிகரித்து உள்ளது. 3 வகையான பேரிக்காய் தற்போது காய்த்து குலுங்குவதால், கரடி நடமாட்டம் உள்ளது.
பூங்கா நுழைவுவாயில் மற்றும் புல்வெளிகளை சுற்றி செண்பகம், ஜெகரண்டா என 50 மரக்கன்றுகள் நடவு செய்யப் பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story