16 கிேலா மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை திட்டம்


16 கிேலா மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை திட்டம்
x
தினத்தந்தி 20 July 2021 11:16 PM IST (Updated: 20 July 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 16.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக ராஜகுமார் எம்.எல்.ஏ. மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 16.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக ராஜகுமார் எம்.எல்.ஏ. மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புறவழிச்சாலை அமைக்கும் திட்டம்
மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. அந்த திட்டத்தின்படி அப்போது மயிலாடுதுறை நகரை சுற்றி 100 அடி அகலத்தில் சாலை அமைப்பதற்காக நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கற்கள் பதிக்கப்பட்டன. இந்த புறவழி சாலை அமைய உள்ள பெரும்பாலான நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட பரிமள ரங்கநாதர் கோவிலுக்கும், தருமபுரம், திருவாடுதுறை ஆதீனங்களுக்கும் சொந்தமான நிலங்களாக உள்ளன. 
கிடப்பில் போடப்பட்டது
இந்த நிலங்களை கைப்பற்றுவதில் இந்து சமய அறநிலையத்துறை நிர்ணயித்த தொகையை தமிழக அரசு குறைத்து மதிப்பீடு செய்ய கேட்டுக்கொண்டது. இதில் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த 10 ஆண்டுகளாக மயிலாடுதுறை புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மயிலாடுதுறை புறவழிச்சாலை திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
எம்.எல்.ஏ.-அதிகாரிகள் ஆய்வு
இதனைத்தொடர்ந்து இந்த புறவழிச்சாலை திட்டத்திற்கான ஆய்வு பணி நேற்று ராஜகுமார் எம்.எல்.ஏ., மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. முன்னதாக கல்லணை சாலையில் மாப்படுகை பகுதியிலிருந்து அமைய உள்ள புறவழிச்சாலை இடத்தை எம்.எல்.ஏ., மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் ராஜகுமார் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை புறவழிச்சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு காரணங்களால் இந்த பணி கிடப்பில் போடப்பட்டு விட்டது. 
இது குறித்து தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். விரைவில் புறவழிச்சாலை பணி தொடங்கப்படும். ஓரிரு வாரங்களில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மயிலாடுதுறை வந்து புறவழிச்சாலை பணிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என்றார்.
16 கிலோ மீ்ட்டர் தூரத்திற்கு ...
நெடுஞ்சாலைத்துறை(நபார்டு  மற்றும் கிராம சாலைகள்) உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார் கூறுகையில், 16.6 கிலோ மீட்டர் தொலைவில் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக கல்லணை சாலையில் இருந்து தொடங்கி சீர்காழி சாலை சாவடி வரை 7 கிலோ மீட்டர் புறவழிச்சாலை பணிகள் நடைபெற உள்ளது. 
தொடர்ந்து சீர்காழி சாலையில் இருந்து பூம்புகார் சாலை கடந்து தரங்கம்பாடி சாலையில் புதிதாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமையவுள்ள இடம் வரை 5½ கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட உள்ளது. அதன் பிறகு தரங்கம்பாடி சாலையில் இருந்து திருவாரூர் சாலை வரை மீதமுள்ள சாலை அமைக்கப்படும். இதற்கான திட்ட வரைவு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.இந்த ஆய்வின்போது தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் இமயநாதன், காங்கிரஸ் நகர தலைவர் ராமானுஜம், நிர்வாகிகள் நவாஸ், வடவீரபாண்டியன், வர்த்தக சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மகாலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story