மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மயிலாடுதுறை:
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பேச்சு வார்த்தை
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் மீனவர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், அரசு அதிகாரிகள் மற்றும் 14 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த திருமுல்லைவாசல் மீனவ கிராம தலைவர் காளிதாஸ், மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை மீறி தொழில் செய்பவர்களை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்துள்ளனர்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அவர்களை நாங்களே சிறைபிடிக்க நேரிடும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கிராம மக்களிடம் நேரடியாக வந்து தெளிவுபடுத்தினால் மட்டுமே போராட்டம் வாபஸ் குறித்து முடிவு எடுக்கப்படும்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
பேச்சுவார்த்தைக்கு மக்கள் பிரதிநிதியாக வந்திருக்கக்கூடிய நாங்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது. சுருக்குமடி வலை பயன்படுத்துவது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் லலிதா கூறுகையில், கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டுள்ளது. இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீன்பிடி தொழில் தொடர்பாக அரசால் தடை செய்யப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பூம்புகார்
மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் இரவு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதனை அடுத்து பேச்சுவார்த்தை குறித்து விளக்க சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பூம்புகார் மீனவ கிராமத்திற்கு வருகை தந்தார். அப்போது மீனவர்கள், அரசால் கொண்டு வரப்பட்டுள்ள 21 வகையான சட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும். குறிப்பாக இரட்டை வலை, குண்டு போட்ட வலை உள்ளிட்டவைகள் கொண்டு பிடித்து வரும் மீன்களை ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.
போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
இதையடுத்து உதவி கலெக்டர், அரசால் கொண்டுவரப்பட்டுள்ள 21 வகையான சட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய மீனவர்கள், அரசு ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
அப்போது சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், தாசில்தார் சண்முகம், பூம்புகார் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், கிராம நிர்வாக அதிகாரி மணிமாறன் மற்றும் கிராம பஞ்சாயத்தார்கள் உடன் இருந்தனர். இதேபோல் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல், மடவாமேடு ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று சீர்காழி உதவி கலெக்டர் பேசினார். இதனைத்தொடர்ந்து மேற்கண்ட இரு கிராமங்களிலும் மீனவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
Related Tags :
Next Story