கொரோனா நிவாரண நிதிக்கு 3½ பவுன் நகையை வழங்கிய ஆசிரியை
விருதுநகரில் கொரோனா நிவாரண நிதிக்கு 3½ பவுன் நகையை ஆசிரியை வழங்கினார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஆசிரியை கவிதா (வயது 30). இவருடைய கணவர் கல்லூரி பேராசிரியராக இருந்து வந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தார்.
கணவரை இழந்து தவித்த கவிதாவுக்கு கணவரின் பெற்றோர் வீட்டில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லையாம். அவரது மகன் மனிஷ் விஷ்வாவையும் (10) அவர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர்.
தனக்கு ஒரே ஆறுதலாக இருந்த மகனை கவிதா நீதிமன்றம் மூலம் திரும்பபெற்றார். அவர் தற்போது தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் கவிதா, முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஏதாவது வழங்க வேண்டும் என்று நினைத்த நிலையில் தன்னிடம் பண வசதி ஏதும் இல்லாததால், தனது 3½ பவுன் நகையை வழங்க முடிவு செய்தார்.
அவர் தனது மகனுடன் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டரை சந்தித்து 3½ பவுன் நகையை பெற்றுக்கொள்ளுமாறு கொடுத்தார். இது கலெக்டருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் கலெக்டர் மேகநாதரெட்டி, மனிதநேயத்துடன் அவரது நிலையை விசாரித்து அறிந்து நகையை வாங்க மறுத்துவிட்டார்.
பின்னர் கவிதா, கலெக்டரிடம் தனது மகன் மனிஷ் விஷ்வாவை மெட்ரிக் பள்ளியில் படிக்க வைக்க வசதியில்லை என்று தெரிவித்தார். மனிஷ் விஷ்வாவிற்கு 25 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் ஆங்கிலப்பள்ளியில் படிப்பதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்த கலெக்டர், கவிதாவிடம் உரிய வேலை வாய்ப்பு வரும்போது அதற்கு பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து மனிஷ் விஷ்வாவுக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாக அளித்து நன்றாக படிக்க வேண்டும் என்று உற்சாகம் அளித்தார்.
விருதுநகரில் கொரோனா நிவாரண நிதிக்கு 3½ பவுன் நகையை ஆசிரியை வழங்கினார்.
Related Tags :
Next Story