சேலத்தில் கைத்தறி நெசவாளர்களுடன் ஆலோசனை: தர்மபுரியில் ரூ.10 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா-அமைச்சர் காந்தி தகவல்


சேலத்தில் கைத்தறி நெசவாளர்களுடன் ஆலோசனை: தர்மபுரியில் ரூ.10 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா-அமைச்சர் காந்தி தகவல்
x
தினத்தந்தி 20 July 2021 10:32 PM GMT (Updated: 20 July 2021 10:32 PM GMT)

சேலத்தில் கைத்தறி நெசவாளர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தர்மபுரியில் ரூ.10 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காந்தி கூறினார்.

சேலம்:
சேலத்தில் கைத்தறி நெசவாளர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தர்மபுரியில் ரூ.10 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காந்தி கூறினார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் கடைவீதி 2-வது அக்ரஹாரம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி நெசவாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் கார்மேகம் வரவேற்றார். 
கூட்டத்தில் அமைச்சர் காந்தி, நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் 66 பேருக்கு ரூ.41 லட்சத்து 60 ஆயிரத்து 197 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் இணை இயக்குனர்கள் (கைத்தறி) கிரிதரன், சாரதி சுப்புராஜ் (துணிநூல்), சேலம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குனர் ஆனந்தன், மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வு செய்யவில்லை
முன்னதாக கதர் விற்பனை நிலையம், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை அமைச்சர் காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளிடம், கைத்தறி ஆடைகள், பட்டு சேலைகள் விற்பனை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக இந்த துறையை யாரும் ஆய்வு செய்யவில்லை. தற்போது இந்த துறையில் என்னென்ன குறைகள் உள்ளது?, அதற்கான தீர்வு மற்றும் விற்பனையை மேம்படுத்துவதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ரூ.15 கோடி விற்பனை செய்யப்பட்டு வந்த சேலம் கோ-ஆப்டெக்சில் கொரோனாவால் விற்பனை குறைந்துள்ளது. ரூ.30 கோடி வரை விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மெகா ஜவுளி பூங்கா
கோ- ஆப்டெக்சில் ஆர்க்கானிக் ரகங்களை ஊக்குவித்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு அடுத்தபடியாக நெசவாளர்களுக்கு முக்கியவத்துவம் கொடுக்கப்படுகிறது. கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது தமிழகத்தின் நிதிநிலை மிக மோசமாக உள்ளது. வருகிற பட்ஜெட்டில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தமிழகத்தில் 8 இடங்களில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுகிறது. அத்துடன் தர்மபுரியில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
போலி சங்கங்கள் 
கடந்த ஆட்சி காலத்தில் நடந்த குறைகளை கூறாமல், ஒவ்வொரு துறைகளிலும் உள்ள குறைகளை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் பெயரளவில் மட்டுமே இயங்கும் சங்கங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் போலி சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story