மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,301 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரத்து 301 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரத்து 301 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி ஆறு
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக 2 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 17-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக 18-ந் தேதி காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
16,301 கனஅடி தண்ணீர்
கடந்த 18-ந் தேதி காலை அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 151 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து ஆனது நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 12 ஆயிரத்து 704 கனஅடியாக அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 16 ஆயிரத்து 301 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நீர்மட்டம் உயர்வு
அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்றுமுன்தினம் காலை 72.61 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 73.29 அடியாக உயர்ந்துள்ளது.
இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story