செம்பனார்கோவில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் - அதிகபட்சமாக குவிண்டால் ரூ.7,399-க்கு விலைபோனது


செம்பனார்கோவில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் - அதிகபட்சமாக குவிண்டால் ரூ.7,399-க்கு விலைபோனது
x
தினத்தந்தி 21 July 2021 11:42 AM IST (Updated: 21 July 2021 11:42 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.7,399-க்கு விலைபோனது.

பொறையாறு,

மயிலாடுதுறை மாவட்டத்தில் 4,586 எக்டேர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருத்தி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பருத்தியை மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் மற்றும் சீர்காழியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில், செம்பனார்கோவில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3,600 குவிண்டால் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இந்த ஏலத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாருர், தேனி, ஆத்தூர், விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.

இந்த ஏலத்தில் பருத்தி மத்திய அரசின் அதிக பட்ச ஆதாரவிலை ரூ.5825-ஐ விட பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7,399-க்கும், சராசரியாக ரூ.6,980-க்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இந்த ஏலத்தில் ரூ.2 கோடி மதிப்புடைய பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.

மத்திய அரசின் ஆதாரவிலையை விட அதிக விலைக்கு பருத்தி ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் விவசாயிகள் கூறுகையில், பருத்தி அதிக அளவில் விற்பனைக்கு வருவதால் திறந்தவெளியில் பருத்தியை வைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கூடுதல் கிடங்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

Next Story