தீக்குளிக்க முயன்ற நகராட்சி ஊழியர் கைது


தீக்குளிக்க முயன்ற நகராட்சி ஊழியர் கைது
x
தினத்தந்தி 21 July 2021 5:38 PM IST (Updated: 21 July 2021 5:38 PM IST)
t-max-icont-min-icon

அதிகாரி அவமதித்ததாக கூறி, தேனி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

தேனி: 

 தீக்குளிக்க முயற்சி

தேனி அல்லிநகரம் நகராட்சியில், தூய்மை பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் நடராஜன் (வயது 56). இவர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று தனது ஸ்கூட்டரில் வந்தார். அதில், 5 லிட்டர் கேனில் டீசல் கொண்டு வந்தார்.

அவரைப் பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார், டீசல் கொண்டு வந்த கேனை பறிமுதல் செய்தனர். அப்போது நடராஜன் டீசலை தன்னிடம் கொடுக்குமாறும், தான் தற்கொலை செய்து கொள்வதற்காக வந்துள்ளதாகவும் போலீசாரிடம் கூறினார். 

போலீசார் அவரை தடுத்தபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதை போலீசார் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.

  கைது-பரபரப்பு
மேலும் இதுகுறித்து நடராஜன் கூறுகையில், "நான் 1985-ம் ஆண்டு தேனி அல்லிநகரம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியில் சேர்ந்தேன். தற்போது மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன்.

 நான் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவராக உள்ளேன். புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி ஒருவருக்கு சால்வை அணிவிக்க சென்றேன். அவர் என்னை அவமதித்து பேசி விட்டார். இதனால், மனம் உடைந்து தற்கொலை செய்ய வந்தேன்" என்றார்.

இதையடுத்து போலீஸ் நிலையம் அழைத்து செல்வதற்காக, நடராஜனை போலீசார் ஆட்டோவில் ஏற்ற முயன்றனர். ஆனால் அவர் ஆட்டோவில் ஏற மறுத்து, தனது ஸ்கூட்டரில் தான் போலீஸ் நிலையம் வருவேன் என்றார். 

பின்னர் அவரை ஸ்கூட்டரை ஓட்ட சொல்லி போலீஸ்காரர் ஒருவர் பின்னால் அமர்ந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். 

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-------

Next Story