வீர தீர செயல்புரிந்தவர்களுக்கு ஜீவன் ரக்‌ஷ விருது விண்ணப்பிக்க 7-ந் தேதி கடைசி நாள்


வீர தீர செயல்புரிந்தவர்களுக்கு ஜீவன் ரக்‌ஷ விருது விண்ணப்பிக்க 7-ந் தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 21 July 2021 7:41 PM IST (Updated: 21 July 2021 7:41 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் ஜீவன் ரக்‌ஷ விருது பெற, வீர தீர செயல்புரிந்தவர்கள் வருகிற 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

கடலூர், 

தன்னுயிரை பொருட்படுத்தாது, மற்றவர்களின் தனிப்பட்ட உயிர் பாதுகாப்பிற்காக வீர தீர செயல்புரிந்து சேவை செய்த ஆண்கள் மற்றும் பெண்களை பாராட்டி கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது.

அதாவது மத்திய அரசின் 2021-ம் ஆண்டுக்கான சர்வோட்டம் ஜீவன் ரக்‌ஷ பதக்க விருது பெறுவதற்கு, தன்னுயிரை பொருட்படுத்தாது மிகப்பெரிய ஆபத்தில் உள்ள மற்றவர்களின் தனிப்பட்ட உயிர் பாதுகாப்பிற்காக அதீத தைரியத்துடன் செயல்பட்டு உயிரை பாதுகாத்திருக்க வேண்டும். உத்தம ஜீவன் ரக்‌ஷ பதக்க விருதுக்கு தன்னுயிரை பொருட்படுத்தாது, சூழ்நிலைக்கேற்ப, தைரியத்துடன் உடனடியாக செயல்பட்டு ஆபத்தில் உள்ளவரின் உயிரை பாதுகாத்திருக்க வேண்டும்.

ஜீவன் ரக்‌ஷ பதக்க விருதுக்கு, சூழ்நிலைக்கேற்ப தைரியத்துடன் உடனடியாக செயல்பட்டு, உடல் காயத்தினால் ஆபத்தில் உள்ளவரின் உயிரை பாதுகாத்தல் வேண்டும். மேலும் இவ்விருதுகளுக்கு ராணுவம், காவல்துறை, தீயணைப்பு துறையைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இயற்கை பேரிடர் விபத்து, தீவிரவாத தாக்குதல், நீரில் மூழ்குதல், தீவிபத்து போன்ற காரணங்களுக்காக 1.10.2019-க்கு பிறகு செய்த சேவையாக இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை கடலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 7-ந் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. எனவே தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story