கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை


கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
x

கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் நேற்றிரவு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.32,430 சிக்கியது.

கோத்தகிரி, 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தாலுகா அலுவலகம் உள்ளது. தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் பெற தாசில்தார் கையெழுத்துடன் கூடிய அனுபோக சான்று பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த சான்றிதழ் வாங்க விவசாயிகள் பலர் வருகிறார்கள்.

இதை சாதகமாக பயன்படுத்தி இடைத்தரர்கள் விவசாயிகளிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாக நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாரும் சென்றது. இதையடுத்து நேற்று இரவு 7 மணிக்கு நீலகிரி மாவட்ட ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷினி தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் உள்பட 8 போலீசார் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள 2 நுழைவு வாயில்களை மூடினார்கள். அத்துடன் அங்கு நின்றிருந்த பொதுமக்கள், இடைத் தரகர்கள், தாசில்தார் அலுவலக ஊழியர்கள் மற்றும் காரில் அமர்ந்து இருந்தவர்கள் என அனைவரையும் தாசில்தார் அலுவலகத்துக்குள் அழைத்துச்சென்றனர். தொடர்ந்து அவர்கள், ஊழியர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், பொது மக்கள் என அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற் கொண்டனர். அதுபோன்று தலைமையிட துணை தாசில்தார், மண்டல துணை தாசில்தார் ஆகியோர் அறைகளில் இருந்த கோப்புகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து அங்கு கணக்கில் வராமல் வைக்கப்பட்டு இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பிறகு அலுவலக ஊழியர்கள் அனைவரையும் சோதனை செய்து, அவர்கள் வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த அதிரடி சோதனையின்போது கணக்கில் வராத ரூ.32,430 ஐ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருப்பு தொகையில் ரூ.30 ஆயிரம் குறைந்தது. அதற்க அதிகாரிகள் சரியான பதிலை கூறவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story