68½ அடியாக உயர்ந்த வைகை அணை நீர்மட்டம்


68½ அடியாக உயர்ந்த வைகை அணை நீர்மட்டம்
x
தினத்தந்தி 21 July 2021 4:34 PM GMT (Updated: 21 July 2021 4:34 PM GMT)

தொடர் நீர்வரத்து எதிரொலியாக, வைகை அணையின் நீர்மட்டம் 68½ அடியாக உயர்ந்தது. இதனால் கரையோரத்தில் வசிக்கிற மக்களுக்கு, 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆண்டிப்பட்டி:

வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்குகிறது.

71 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம், கடந்த மாதம் முதல் வாரத்தில் 67 அடியாக இருந்தது. இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு முதல்போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்மழை எதிரொலியாக மூல வைகை ஆற்றில் இருந்தும் அணைக்கு தண்ணீர் வந்தது.

 வெள்ள அபாய எச்சரிக்கை

அணையில் இருந்து திறக்கப்படுகிற தண்ணீரை காட்டிலும், நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. அதன்படி கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்த நிலையில், கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்தநிலையில் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் எதிரொலியாக, நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 68½ அடியாக உயர்ந்தது. இதனையடுத்து கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

 2 முறை அபாய சங்கு

வெள்ள அபாய எச்சரிக்கையை அறிவிக்கும் வகையில், அணையில் உள்ள அபாய சங்கு 2 முறை ஒலிக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால், இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் உபரியாக ஆற்றில் திறப்பது வழக்கம்.

 68½ அடி தண்ணீரை எட்டியிருப்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story