நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி தீர்வு மாவட்ட நீதிபதி சந்திரன் தகவல்


நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி தீர்வு மாவட்ட நீதிபதி சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 21 July 2021 4:38 PM GMT (Updated: 21 July 2021 4:38 PM GMT)

விழுப்புரம் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்று மாவட்ட நீதிபதி சந்திரன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி எம்.சந்திரன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்டத்தின்படி அமைக்கப்பட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மக்கள் நீதிமன்றம் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

பயணிகள் ஏற்றிச்செல்லக்கூடிய அல்லது சரக்குகள் எடுத்துக்கொள்ளக்கூடிய நீர் மற்றும் நிலவழி போக்குவரத்து சேவை, தபால், தந்தி மற்றும் தொலைபேசி சேவை, ஒரு நிறுவனத்தினரால் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் மின்சாரம், ஒளி, தண்ணீர் சேவை, பொது சுத்தம், சுகாதார சேவை, மருத்துவமனை, மருத்துவ சேவை, காப்பீட்டு சேவை, கல்வி நிறுவனங்கள் சார்ந்த சேவை, வீடு, வீட்டுமனை சேவை ஆகிய சேவைகள் சம்பந்தமாக குறைபாடு, அதிருப்தி, தவறு ஏதேனும் இழைக்கப்பட்டது என்று கருதினால் பொதுமக்கள், இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வக்கீல் வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நீதிமன்ற கட்டணமும் கிடையாது. இங்கு பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு 2 வாரத்திற்குள் அல்லது அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் தீர்வு கிடைக்கும். இதுவும் நீதிமன்ற தீர்ப்பு தான். மேல்முறையீடு செய்ய வேண்டுமெனில் ஐகோர்ட்டுக்குத்தான் செல்ல வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story