திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை நீட்டிப்பு


திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 21 July 2021 10:10 PM IST (Updated: 21 July 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

பவுர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து 16-வது மாதமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் வரவேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை

பவுர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து 16-வது மாதமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் வரவேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 கிரிவலத்துக்கு தடை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள். 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. 

16-வது மாதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர். 

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
பக்தர்கள் வரவேண்டாம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. 

இந்த மாதத்துக்கான பவுர்ணமி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.38 மணிக்கு தொடங்கி மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.51 மணிக்கு நிறைவடைகிறது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நாட்களான நாளை, நாளை மறுநாள் மலைச் சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம். 

ஒத்துழைக்க வேண்டும்


தமிழக அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story