பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 21 July 2021 4:51 PM GMT (Updated: 21 July 2021 4:51 PM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி கடலூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

கடலூர், 

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகையை நேற்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடினர். அதன்படி கடலூரிலும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். கொரோனா பரவல் காரணமாக மசூதிகளில் கடலூர் மஞ்சக்குப்பம் மசூதியில் குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தினர்.

மசூதிகளுக்கு செல்ல முடியாதவர்கள் வீடுகளில் இருந்தபடியே சிறப்பு தொழுகை நடத்தி பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். பின்னர் தங்களால் முடிந்த உதவிகளை ஏழைகளுக்கு செய்தனர். முன்னதாக அவர்கள் புத்தாடை அணிந்து, தொழுகை முடித்து ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

சிறப்பு தொழுகை

இதேபோல் கடலூர் டவுன்ஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முஸ்லிம்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர். பின்னர் பக்ரீத் தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆயங்குடி-ராமநத்தம்

காட்டுமன்னார்கோவில் கோவில் அருகே ஆயங்குடியில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பெரிய பள்ளிவாசல் இமாம் அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற தொழுகையில், 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். பின்னர் உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

ராமநத்தத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை  நடத்தினர். பின்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

விருத்தாசலம்

இதேபோல் விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 

அதன்படி, விருத்தாசலம் ஆலடி ரோடு நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். பின்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

Next Story