நிலுவை தொகை வழங்காமல் அரவை நடத்தினால் வாகனங்களை மறிப்போம்; விவசாயிகள் அறிவிப்பு


நிலுவை தொகை வழங்காமல் அரவை நடத்தினால் வாகனங்களை மறிப்போம்; விவசாயிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 July 2021 10:29 PM IST (Updated: 21 July 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை நிலுவை தொகை வழங்காமல் அரவை நடத்தினால் கரும்பு ஏற்றி வரும் வாகனங்களை மறிப்போம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

கீழ்பென்னாத்தூர்

கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை நிலுவை தொகை வழங்காமல் அரவை நடத்தினால் கரும்பு ஏற்றி வரும் வாகனங்களை மறிப்போம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். 

 சர்க்கரை ஆலை

விழுப்புரம் மாவட்டம் பாலப்பாடி கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர், கரிக்கலாம்பாடி, கனியாம்பூண்டி, வேடநத்தம், மங்கலம், வேட்டவலம், கொளத்தூர், சோமாசிபாடி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கரும்பு விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் கரும்புகளை இந்த சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தனர்.

கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவை தொகை ரூ.2 கோடிக்கு மேல் வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. கரும்பு அறுவடை இல்லாத நிலையில் ஆலையும் இயங்கவில்லை.

 கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களை...

இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் ஆலை இயங்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அறிந்த கரும்பு விவசாயிகள் தங்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையை வழங்காமல் ஆலை அரவையை தொடங்கக்கூடாது என கோரிக்கை வைத்தனர். ஆனால் சர்க்கரை ஆலை நிர்வாகம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தாமல் ஆலையை திறக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கீழ்பென்னாத்தூர் பகுதி கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்களை வழிமறித்து நிறுத்துவோம் என அறிவித்துள்ளனர். 

 துண்டு பிரசுரம் 

மேலும் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். 

கீழ்பென்னாத்தூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை மண்டல அலுவலக முகப்பில் உள்ள பெயர் பலகையில் கரும்பு விவசாயிகள் துண்டு பிரசுரங்களை ஒட்டியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Next Story