தஞ்சை அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1500 நெல் மூட்டைகள் பறிமுதல்


தஞ்சை அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1500 நெல் மூட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 July 2021 10:33 PM IST (Updated: 21 July 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1500 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான 2 ஆயிரம் சாக்குகளும் கைப்பற்றப்பட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வல்லம், 

தஞ்சையை அடுத்துள்ள வல்லம்-ஆலக்குடி சாலையில் ஏகவுரியம்மன் கோவில் அருகே உள்ளது சாய்பாபா நகர். இங்குள்ள காட்டுப்பகுதியில் வல்லத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான 2500 சதுர அடி பரப்பளவு கொண்ட குடோன் உள்ளது. இந்த குடோனில் தனியார் புரோக்கர்கள் சிலரால் நெல் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் உமாமகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்று முன் தினம் நள்ளிரவு உமா மகேஸ்வரி அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அந்த குடோன் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் அங்கிருந்து திரும்பி சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி தலைமையில் தரக்கட்டுப்பாடு மேலாளர் ராமமூர்த்தி, கொள்முதல் மற்றும் இயக்க துணை மேலாளர் இளங்கோவன், தாசில்தார் பாலசுப்பிரமணியன், மண்டல துணை தாசில்தார் செந்தில், வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், வருவாய் ஆய்வாளர் சரவணன், வல்லம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் குடோன் அமைந்துள்ள பகுதிக்கு வந்தனர். பின்னர் குடோனில் பூட்டி இருந்த பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு 1500 நெல்மூட்டைகள், நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான அரசு முத்திரையிட்ட 2 ஆயிரம் சாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1500 நெல் மூட்டைகளையும் பறிமுதல் செய்து 3 லாரிகளில் ஏற்றி தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு கொண்டு சென்றனர்..

இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கொடுத்துள்ள புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் குடோனை வாடகைக்கு எடுத்து நெல் மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் அந்த தனியார் குடோனில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான அரசு முத்திரையிடப்பட்ட 2 ஆயிரம் சாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், இந்த சம்பவத்தில் நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு தொடர்ப்பு உள்ளதா? என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனியார் குடோனில் 1500 நெல் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story