பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு காந்தையாறு பாலம் தண்ணீரில் மூழ்கியது
பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்ததால் சிறுமுகை அருகே உள்ள காந்தையாறு பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் 4 கிராம மக்கள் தவிக்கும் நிலை உள்ளது.
மேட்டுப்பாளையம்
பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்ததால் சிறுமுகை அருகே உள்ள காந்தையாறு பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் 4 கிராம மக்கள் தவிக்கும் நிலை உள்ளது.
காந்தையாறு பாலம்
கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் காந்தவயல், மொக்கை மேடு, உளியூர், ஆலூர் என 4 கிராமங்கள் உள்ளன. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஏழை,எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் லிங்காபுரத்திலிருந்து காந்தவயலுக்கு செல்லும் வழியில் பவானிசாகர் அணையின் நீர்தேக்கப்பகுதியில் காந்தையாறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு உள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டும்போது இந்த ஆற்று பாலம் தண்ணீரில் மூழ்கிவிடும்.
தண்ணீரில் மூழ்கியது
இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆறு மற்றும் மாயாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது.
இதனால் லிங்காபுரம் பகுதியில் உள்ள நீர்தேக்க பகுதியில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. அதுபோன்று காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலமும் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
கிராம மக்கள் தவிப்பு
பாலத்தின் மீது போடப்பட்ட சாலையில் ஒரு அடிக்கு தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதுபோன்று இணைப்பு சாலை முழுவதுமாக மூழ்கிவிட்டது. இருந்தபோதிலும் அந்த தண்ணீர் வழியாக கிராம மக்கள் சென்று வருகிறார்கள்.
தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் இந்த பாலத்தை கிராம மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். பரிசலில் மட்டுமே செல்லக்கூடிய நிலை ஏற்படும். இதன் காரணமாக 4 கிராம மக்கள் தவித்து வருகிறார்கள்.
உயர்மட்ட பாலம்
பவானிசாகர் அணை நீர்மட்டம் உயரும்போது இந்த பாலம் தண்ணீரில் மூழ்குவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதைத்தடுக்க இங்கு உயர்மட்ட அளவில் பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடக்கை எடுத்து, 4 கிராம மக்கள் மழைக்காலத்தில் ஏற்படும் அவதியை போக்க காந்தையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலத்தை கட்ட வழிவகை செய்ய வேண்டும் என்று அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story