சுற்றுலா தலங்கள் திறக்கப்படுவது எப்போது
ஊட்டியில் சுற்றுலா தலங்கள் திறக்கப்படுவது எப்போது? என்று, அங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஊட்டி,
ஊட்டியில் சுற்றுலா தலங்கள் திறக்கப்படுவது எப்போது? என்று, அங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
இ-பாஸ் ரத்து
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வில் பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் ரத்து செய்யப்பட்டது.
வெளிமாநிலங்களில் இருந்து இ-பதிவு மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் உள்ளே வர அனுமதிக்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். அவர்கள் காட்டேஜ்கள், விடுதிகளில் தங்கி செல்கிறார்கள்.
ஏமாற்றம்
இதற்கிடையே தினமும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களின் நுழைவுவாயில் முன்பு சென்று எப்போது திறக்கப்படும் என்று கேட்டு செல்கின்றனர். கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டும் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.
அதனருகே கடை வைத்து உள்ள வியாபாரிகளிடம் வேறு எந்த சுற்றுலா தலம் திறக்கப்பட்டு இருக்கிறது, எந்த இடங்களை சுற்றி பார்க்கலாம் என்று கேட்கின்றனர். அதற்கு அவர்கள் சாலை மார்க்கமாக செல்லும்போது அணை பகுதி, பசுமையான தேயிலை தோட்டங்கள், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம் என்கின்றனர்.
குதிரை சவாரி
சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவதால் ஊட்டி படகு இல்ல சாலையில் 15-க்கும் மேற்பட்ட குதிரைகளை சவாரிக்காக தொழிலாளர்கள் நிறுத்தி உள்ளனர். குதிரை மீது சுற்றுலா பயணிகள் அமர்ந்து புகைப்படம் எடுப்பதோடு, சவாரி செய்து மகிழ்கின்றனர்.
சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியவில்லை என்றாலும் குதிரை சவாரி செய்வது நிம்மதி அளிப்பதாக தெரிவிக்கின்றனர். இருப்பினும் சவாரி செய்ய பலர் ஆர்வம் காட்டாததால் ஊரடங்கு தளர்விலும் வருமானமின்றி குதிரைகளை பராமரிக்க முடியாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திறக்க வேண்டும்
இதுகுறித்து குதிரை சவாரி தொழிலாளர்கள் கூறும்போது, குதிரை மீது அமர்ந்து புகைப்படம் எடுக்க ரூ.20, சவாரிக்கு ரூ.100 முதல் ரூ.400 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குதிரைகளை பராமரிக்க முடியாமல் கேரட் அறுவடைக்கு சென்றோம்.
தற்போது சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று குதிரைகளை நிறுத்தி வைத்தும் போதிய வருமானம் இல்லை. எனவே சுற்றுலா தலங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story