நளினி-முருகனுக்கு நீண்டநாள் பரோல் வழங்க முடியாது, அமைச்சர் ரகுபதி பேட்டி


நளினி-முருகனுக்கு நீண்டநாள் பரோல் வழங்க முடியாது, அமைச்சர் ரகுபதி பேட்டி
x
தினத்தந்தி 21 July 2021 11:48 PM IST (Updated: 21 July 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

நளினி-முருகனுக்கு நீண்டநாள் பரோல் வழங்க முடியாது என்று வேலூர் ஜெயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சிறைத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

வேலூர்

அமைச்சர் திடீர் ஆய்வு

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறை உள்ளது. இங்கு நேற்று தமிழக சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது ஜெயிலில் கைதிகளால் தயாரிக்கப்படும் ஷூக்கள், பெல்ட் போன்ற பொருட்களை பார்வையிட்டார். ஜெயில் நடைமுறைகள், அங்கு நடைபெறும் விவசாயம், தோல் தொழில், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து பெண்கள் ஜெயிலுக்கு சென்று அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். ஆய்வின்போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன், சாந்தன், நளினி உள்பட கைதிகள் பலரை சந்தித்து பேசினார். மேலும் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
நளினி- முருகன்

பின்னர் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் ஆண்கள் ஜெயிலில் 742 பேரும், பெண்கள் ஜெயிலில் 97 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரி, சமையல் கூடம், கைதிகள் தங்கும் இடம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன், நளினி, சாந்தன் உட்பட அனைத்து கைதிகளையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தோம்.

முருகன், நளினி இருவரும் தங்களுக்கு நீண்டநாள் விடுப்பு வழங்க வேண்டும் என கேட்டனர். அவர்களிடம் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் 30 நாட்கள் விடுப்பு வழங்க முடியும். அதனை நீட்டிக்கவும் முடியும். ஆனால் நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க முடியாது. 

நீண்ட நாட்கள் விடுப்பு வழங்குவது குறித்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்து பெற்றுக்கொண்டால் அதனை செயல்படுத்த தயாராக இருக்கிறோம் என தெரிவித்தேன். மற்ற கைதிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்துள்ளனர்.

வேலூர் ஜெயிலில் ஷூ தயாரிப்பு, நெசவுத் தொழில் செய்து வருகின்றனர். இந்தத் தொழிற்கூடங்கள் விரிவாக்கம் செய்யப்படும்.

கடும் நடவடிக்கை

வேலூரில் சிறைக் கைதிகளால் பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது. இதேபோல தமிழகத்தில் மேலும் 6 இடங்களில் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் திறக்கப்படும்.

ஜெயில் கைதிகள் அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் புதிய வேலை வாய்ப்பு வழங்கப்படும். கிளை சிறைகளில் பழுதான கட்டிடங்கள் புதுப்பிக்கப்படும். புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உயர் நீதிமன்ற பரிந்துரையின் பேரில் தலைமை நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

ஜெயில்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
சிறைகாவலர்களுக்கும் கொரோனா நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது கைத்தறி மற்றும் துணிநூல்  துறை அமைச்சர் காந்தி, எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story