நத்தம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தந்தை-மகன் பலி


நத்தம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தந்தை-மகன் பலி
x
தினத்தந்தி 21 July 2021 7:04 PM GMT (Updated: 2021-07-22T00:34:01+05:30)

நத்தம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர்.

செந்துறை:
நத்தம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர். 
தபால்காரர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 48). இவர் அந்த கிராமத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் தபால்காரராக பணியாற்றி வந்தார். இவரது மகன் ஜெய்ஸ்ரீராம் கணேஷ் (13). இவர் நத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். 
இந்தநிலையில் தந்தையும், மகனும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நேற்று மாலை சேக்கிப்பட்டியில் இருந்து நத்தத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் அங்கிருந்து சேக்கிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். 
தந்தை-மகன் பலி
நத்தம் அருகே ஏராக்கப்பட்டி பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பாலசுப்பிரமணியனும், ஜெய்ஸ்ரீராம் கணேசும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோயினர். 
மேலும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது காரை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 
டிரைவருக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது இறந்து கிடந்த பாலசுப்பிரமணியன், ஜெய்ஸ்ரீராம் கணேஷ் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story