திருச்சி அருகே ஆடு மேய்த்த மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு; 4 வாலிபர்கள் கைது
திருச்சி அருகே ஆடு மேய்த்த மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை பறித்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,
திருச்சி அருகே ஆடு மேய்த்த மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை பறித்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆடு மேய்த்த மூதாட்டி
திருச்சி அருகே மணிகண்டம் கவுத்த நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகிரி. இவருடைய மனைவி சின்னக்காள் (வயது 80). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள சாலையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரின் அருகே மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். பின்னர், சின்னக்காளிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென அவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
4 பேர் கைது
இதுகுறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பிரிவு ரோட்டில் மணிகண்டம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், அவர்கள் நிற்காமல் சென்றதால் விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 4 பேரும் ஆடு மேய்த்த சின்னக்காளிடம் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற நபர்கள் என தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் நாகமங்கலம் தென்றல் நகரைச் சேர்ந்த வீரமணி, அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மற்றும் அவர்களது நண்பர்கள் பாலாஜி, பாஸ்கர் ஆவர். கைதான 4 பேரும், திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story