தமிழகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்


தமிழகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்
x
தினத்தந்தி 21 July 2021 7:53 PM GMT (Updated: 21 July 2021 7:53 PM GMT)

வேலைவாய்ப்புகளை அதிகரிக்க தமிழகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்று கோவையில் அமைச்சர் த.மனோதங்கராஜ் தெரிவித்தார்.

கோவை

வேலைவாய்ப்புகளை அதிகரிக்க தமிழகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்று கோவையில் அமைச்சர் த.மனோதங்கராஜ் தெரிவித்தார்.

புதிய வேலைவாய்ப்புகள்

கோவை விளாங்குறிச்சி தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) வளாக கூட்டரங்கில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தலைமை தாங்கினார்.

 பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கோவையில் 2-ம் நிலை தொழில்நுட்ப பூங்கா திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அந்த திட்டத்தினை விரைந்து செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்தேன்.

தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 4.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பு படித்து வெளியில் வருகிறார்கள். தகவல் தொழில்நுட்ப துறையில் 1.5 லட்சம் இளைஞர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு வழங்கும் நிலை உள்ளது. 

மற்றவர்கள் வேலை தேடி வேறு மாநிலங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை கருத்தில்கொண்டு தகவல் தொழில்நுட்ப துறையை மேம்படுத்தி தமிழகத்திலேயே அதிகளவு புதிய  வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொழில்நுட்ப பூங்காக்கள்

தகவல் தொழில்நுட்ப துறையில் தற்போது தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது குறித்து தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கேட்டகப்பட்ட கருத்துகளை கவனத்தில் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தகவல் தொழில்நுட்ப துறையில் சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை சிறந்து விளங்குகிறது. விளாங்குறிச்சி பகுதியில் ரூ.114.16 கோடியில் எல்காட் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

இதேபோல தென் மாவட்டங்களை சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலைக்காக சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லக்கூடிய சூழல் உள்ளது. எனவே தென்மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைத்து அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கி தர திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

காகிதமில்லா பட்ஜெட்

சட்டமன்ற கூட்டத்தொடரில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த 10 ஆண்டுகளில் அண்டை மாநிலங்களில் தொழில் முதலீடுகளை ஈர்த்தது போல் தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகள் நடைபெறவில்லை. இனிவரும் காலங்களில் புதிய தொழில் ஈர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் த.மனோ தங்கராஜ் விளாங்குறிச்சியில் எல்காட் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல கட்டிட பணிகள் மற்றும் மாநகராட்சி மத்திய மண்டல பொது இ-சேவை மைத்தினை நேரில் ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அரசு முதன்மை செயலாளர் நீரஜ்மிட்டல், எல்காட் மேலாண்மை இயக்குனர் அஜய் யாதவ், கலெக்டர் சமீரன், எல்காட் மேலாளர் என்.எம்.குமார், மாவட்ட எல்காட் மேலாளர் தனலட்சுமி, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தனி வட்டாட்சியர் ஜோதிபாசு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரங்கநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story