மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு


மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு
x
தினத்தந்தி 21 July 2021 8:04 PM GMT (Updated: 2021-07-22T01:34:56+05:30)

களக்காடு அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

களக்காடு:
களக்காடு அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

சிறுவன்

களக்காடு அருகே உள்ள மேலபடலையார்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் மாதவன் (வயது 39). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முத்து கலா. இவர்களுக்கு சுதிர் (7), சுகன் செல்வா (5) என்ற 2 மகன்கள்.
சம்பவத்தன்று காலை சுதிர், சுகன் செல்வா மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்காக சென்றுள்ளனர். அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரின் ஒயர் அறுந்து ஸ்டே கம்பியுடன் உரசியவாறு தொங்கியுள்ளது. சுகன் செல்வா அந்த ஸ்டே கம்பியை தொட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவன் மீது மின்சாரம் தாக்கியது. இதையடுத்து சுகன் செல்வா கூக்குரலிட்டான்.

சாவு

உடனடியாக அவருடன் சென்ற சிறுவர்கள் ஓடி வந்து குடும்பத்தினர்களிடம் இதுபற்றி கூறினர். இதனைதொடர்ந்து முத்துகலா மற்றும் உறவினர்கள் சுகன் செல்வாவை மீட்டு களக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சுகன் செல்வா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் திருவளன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story