படப்பை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை உறவினர் கைது


படப்பை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை உறவினர் கைது
x
தினத்தந்தி 22 July 2021 12:22 AM GMT (Updated: 2021-07-22T05:52:04+05:30)

படப்பை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் வரதராஜபுரம் முனுசாமி தெருவை சேர்ந்தவர் பொன்னுரங்கம் (வயது 45). பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செண்பகவள்ளி (34). திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பொன்னுரங்கம் வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் செண்பகவள்ளி தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் மிகுந்த மனவேதனை அடைந்து இருப்பதாகவும் தற்கொலைக்கு தங்கை கணவர் ஜோசப்தான் காரணம் என்று தனது செல்போனில் வீடியோ பதிவிட்டு கணவரின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் பொன்னுரங்கம் செண்பகவள்ளியின் செல்போனை தொடர்பு கொண்டார். செண்பகவள்ளி அழைப்பை ஏற்காததால் உடனடியாக பொன்னுரங்கம் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் செண்பகவள்ளி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த சோமங்கலம் போலீசார் செண்பகவள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் செண்பகவள்ளியின் தங்கை லாவண்யா(28) 2-வது பிரசவத்தின் போது இறந்து விட்டார். இதையடுத்து அவரது கணவரான எருமையூர் பகுதியை சேர்ந்த ஜோசப் (38) தனது 6 வயது மகனுடன் செண்பக வள்ளியின் வீட்டின் மாடியில் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்த நிலையில் செண்பகவள்ளிக்கு தெரியாமல் ஜோசப் அமிர்தா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாவும், செண்பகவள்ளியின் வீட்டில் வசித்து வந்த தனது மகனை ஜோசப் அழைத்து சென்றதும் தெரியவந்தது. இதனால் செண்பக வள்ளிக்கும் ஜோசப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. செண்பகவள்ளி மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோசப்பை கைது செய்து கோர்ட்டு காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story