செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் செல்போன்கள் கொள்ளை


செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் செல்போன்கள் கொள்ளை
x
தினத்தந்தி 22 July 2021 6:55 AM IST (Updated: 22 July 2021 6:55 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் மாடசாமி என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு ஆந்திர மாநிலம் பூண்டியை சேர்ந்த அசோக் (வயது 30) என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த அவர். கடையின் இரும்பு ஷெட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவில் கடையின் இரும்பு ஷெட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான 34 உயர்ரக செல்போன்களையும், ஒரு மடிக்கணினியையும் கல்லா பெட்டியில் இருந்த ரூ.9,500-ஐயும் அள்ளிச்சென்றது தெரியவந்தது.

தனிப்படை

சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வந்த கைரேகை நிபுணர்களின் நடத்திய சோதனையில் கொள்ளையர்களின் முக்கிய கைரேகை தடயங்கள் சிக்கியது. மேலும் கொள்ளைபோன கடையின் வெளியே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை சேகரித்த போலீசார் அதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஆரம்பாக்கம் பஜாரையொட்டி ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர திருட்டு குறித்து விசாரிக்க சப்-இன்ஸ்பெக்டர் ராஜீ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 வீடுகளில் கொள்ளை

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள ரோசா நகரை சேர்ந்த கோவில் பூசாரி ரகுராமன் (வயது 60). இவர் கடந்த 18-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோயம்புத்தூரில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், பீரோவிலிருந்த ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் கிராமத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் (30). பழைய மோட்டார் சைக்கிள் விற்பனையாளரான இவரது வீட்டில் பட்டப்பகலில் புகுந்த மர்ம ஆசாமிகள் பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story