சித்தனங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தரப்படுமா? கிராமமக்கள் எதிர்பார்ப்பு


சித்தனங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தரப்படுமா? கிராமமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 22 July 2021 11:31 AM GMT (Updated: 22 July 2021 11:31 AM GMT)

சித்தனங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தரப்படுமா? என கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கூத்தாநல்லூர், 

கூத்தாநல்லூர் அருகே உள்ள சித்தனங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இங்கு சித்தனங்குடி, கர்ணாவூர், கல்லடி, வேளுக்குடி, நீர்மங்கலம், மாளிகைத்திடல், கோம்பூர், வடகட்டளை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்கள் தங்களுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் குழந்தைகள் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். மேலும், கர்ப்பிணி பெண்கள் உள்பட அனைவரும் சிகிச்சை பெற்று வந்தனர்.

தற்போது இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவுக்கு விரிசல்கள் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அங்கு நடைபெற்று வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மிகவும் தூரத்தில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று சிகிச்சை பெற்று வருவதால் அவதியடைந்து வருகின்றனர்.

இ்தையடுத்து அப்பகுதி பொதுமக்கள் பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை கட்டி பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் இடிக்கப்பட்டதாகவும், ஆனால் கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் இதுவரை புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சித்தனங்குடியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story