ரூ.11 ஆயிரத்து 500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம்
கூட்டுறவுத்துறை சார்பில், ரூ.11 ஆயிரத்து 500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
தேனி:
கருத்து கேட்பு கூட்டம்
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத்துறை சார்பில் உழவர் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. கூட்டுறவுத்துறை சார்பில் முதல் கருத்து கேட்பு கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி, தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பங்கேற்ற விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:-
கூட்டுறவு உரம் விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு இயற்கை உரம் விற்பனை செய்ய வேண்டும். டீசல் விலை, வேளாண் இடுபொருட்கள் விலை உயர்வால் விவசாய பணிகளுக்கு செலவு அதிகரித்துள்ளது. எனவே, தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூட்டுறவுத்துறை சார்பில் வழங்கும் பயிர்க்கடன் அளவை உயர்த்தி வழங்க வேண்டும்.
கடன் வழங்குவதில் பாரபட்சம்
சொட்டு நீர்ப் பாசனத்தில் பயன்படுத்தும் சில உரங்களில் மண் கலப்படம் அதிகம் உள்ளது. அதை ஆய்வு செய்ய வேண்டும். பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும்.
அடங்கல் பெறுவதற்காக விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் கிராம நிர்வாக அலுவலகத்தில் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, அடங்கல் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இ-அடங்கல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
வாழை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அவற்றை சந்தைப்படுத்த முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் போன்று தேங்காயை கூட்டுறவுத்துறை மூலம் நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
மருந்து கடைகள் அதிகரிப்பு
விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்து அமைச்சர் இ.பெரியசாமி பதில் அளித்து பேசியதாவது:-
அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் விரும்பும் உரங்களை கொள்முதல் செய்து வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இயற்கை உர தேவையை பூர்த்தி செய்யவும், விவசாயிகளுக்கு வழங்கும் பயிர்க்கடன் அளவை உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் கடன் வழங்க வேண்டும். புதிய உறுப்பினர்களை, அதிக அளவில் சேர்க்க வேண்டும். புதிய உறுப்பினர்களுக்கு தடையின்றி கடன் வழங்க வேண்டும்.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கு இடையூறு உள்ளதாக இனி எந்த புகாரும் தேனி மாவட்டத்தில் இருந்து வரக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன்.
இலக்கு நிர்ணயம்
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் கூட்டுறவு மருந்து கடைகள் தொடங்கப்பட்டன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு மருந்து கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
அனைத்து மருந்துகளும் மிகக் குறைந்த விலையில் வழங்கவும், தற்போது வழங்கப்படும் தள்ளுபடியை மேலும் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அடங்கல் விவரங்களை இ-பதிவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாழை மற்றும் பிற உற்பத்தி பொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும். கடந்த ஆண்டு கூட்டுறவுத்துறை மூலம் பயிர்க்கடன் வழங்க ரூ.9,500 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்த ஆண்டு ரூ.11 ஆயிரத்து 500 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு முதற்கட்டமாக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இலக்கை தாண்டியும் பயிர்க்கடன் வழங்கப்படும்.
காலிப்பணியிடங்கள்
முல்லைப்பெரியாறு அணையின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும். அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் 147 பேருக்கு மொத்தம் ரூ.58 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான கடனுதவியை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.
இதில் கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முகசுந்தரம், மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், கே.எஸ்.சரவணக்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story