தலைஞாயிறு அருகே சுடுகாடு இல்லாததால் சாலையோரத்தில் உடலை தகனம் செய்யும் அவலம் கிராம மக்கள் வேதனை


தலைஞாயிறு அருகே சுடுகாடு இல்லாததால் சாலையோரத்தில் உடலை தகனம் செய்யும் அவலம் கிராம மக்கள் வேதனை
x
தினத்தந்தி 22 July 2021 2:27 PM GMT (Updated: 22 July 2021 2:27 PM GMT)

தலைஞாயிறு அருகே சுடுகாடு இல்லாததால் சாலையோரத்தில் உடலை தகனம் செய்யும் அவலம் உள்ளது. இதனால் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்தில் துளசாபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மகாராஜபுரம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சுடுகாடு வசதி இல்லை.

இவர்கள் பல தலைமுறைகளாக சாலையோரங்களில் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகளாகியும் சுடுகாடு வசதி ஏற்படுத்தி தருவதற்கு யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என இந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தனி சுடுகாடு இல்லாததால் அந்த பகுதியில் உள்ள சாலையோரம் அடப்பாற்றின் கரையில் வைத்து இறந்தவர்களின் உடலை தகனம் செய்து வருகிறார்கள். நேற்று அங்கு சாலையோரம் உடல் தகனம் நடந்தது. இதனால் புகை மூட்டம் பரவி, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவதிப்பட்டனர். சாலையோரம் உடலை எரிப்பதால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே இந்த பகுதிக்கு தனியாக சுடுகாடு அமைத்து, அவல நிலையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, துளசாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

Next Story