அக்னி ஆற்றில் தடுப்பணைக்கு ஆபத்து: சரக்கு ஆட்டோவில் மணல் அள்ளியவர் கைது


அக்னி ஆற்றில் தடுப்பணைக்கு ஆபத்து: சரக்கு ஆட்டோவில் மணல் அள்ளியவர் கைது
x
தினத்தந்தி 22 July 2021 3:48 PM GMT (Updated: 2021-07-22T21:18:39+05:30)

ஒரத்தநாடு அருகே அக்னி ஆற்றில் தடுப்பணைக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அதிக அளவு மணல் அள்ளப்பட்டு வருகிறது. எனவே சரக்கு ஆட்டோவில் அனுமதியின்றி மணல் அள்ளியவரை போலீசார் கைது செய்தனர்.

ஒரத்தநாடு, 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவின் கடைசி தென்கோடி வறட்சி பகுதியாக இருக்கும் நெய்வேலி பகுதிக்கு காவிரி தண்ணீர் செல்வதில்லை. இதனால் இந்த பகுதியில் குடிநீர் தேவை மற்றும் விவசாய சாகுபடிக்கு இங்குள்ள அக்னியாறு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. அக்னியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு, அதில் தண்ணீரை தேக்கி வைத்து நிலங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அக்னி ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதால் தடுப்பணைக்கு ஆபத்து ஏற்பட்டது.

இந்தநிலையில் போலீசார் நடவடிக்கை காரணமாக மணல் கடத்தல் கும்பல் லாரி, மாட்டுவண்டிகளை தவிர்த்து சரக்கு ஆட்டோவில் மணலை கடத்தி செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அனுமதியின்றி சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தி வந்த நெய்வேலி தென்பாதியை சேர்ந்த ராஜ்கிரண் (வயது 21) என்பவரை வாட்டாத்திக்கோட்டை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆட்டோ உரிமையாளரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story