பாதை ஆக்கிரமிப்பை மீட்க கோரி பொதுமக்கள் மனு


பாதை ஆக்கிரமிப்பை மீட்க கோரி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 22 July 2021 4:31 PM GMT (Updated: 22 July 2021 4:31 PM GMT)

பழனி அருகே பாதை ஆக்கிரமிப்பை மீட்க கோரி பொதுமக்கள், தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பழனி: 

பழனி அருகே உள்ள மானூர் நடுத்தெரு பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் நேற்று பழனி தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், மானூர் நடுத்தெருவில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். 

எங்கள் பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை தனிநபர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலியிட்டு அடைத்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது தகாத வார்த்தையால் பேசி எங்களை மிரட்டுகிறார். நாங்கள் மெயின் ரோட்டுக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 

இதேபோல் பழனி மருத்துவ நகரை சேர்ந்த கலைச்செல்வி, மதுரைவீரன், அலமேல் ஆகியோர் பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்து, மனு ஒன்றை அளித்தனர். அதில், பழனி மருத்துவ நகரில் உள்ள வரதமாநதி கிளை வாய்க்கால் கரை பகுதியில் பொதுப்பாதை உள்ளது. இதை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டி உள்ளனர். 


அந்த கரை பகுதியில் யாராவது நடந்து சென்றாலோ, ஆக்கிரமிப்பு குறித்து கேட்டாலோ அவர்கள் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 


Next Story