15 நாட்களாக கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து முளைக்கும் நெல்மணிகள் விவசாயிகள் வேதனை


15 நாட்களாக கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து முளைக்கும் நெல்மணிகள் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 22 July 2021 5:28 PM GMT (Updated: 2021-07-22T22:58:49+05:30)

15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யாததால் நெல்மணிகள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

கறம்பக்குடி, 

கறம்பக்குடி அருகே பட்டத்தி காடு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.

தினமும், 1000 மூட்டைக்குமேல் நெல் வரத்து உள்ள நிலையில் 500 மூட்டைக்கு குறைவாகவே நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் நெல்லை குவியலாக்கி விவசாயிகள் 20 நாட்களுக்கு மேலாக காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் கடந்த 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேக்கமடைந்து கொள்முதல்நிலையத்திலேயே குவித்து வைக்கப் பட்டு உள்ளன. கறம்பக்குடி பகுதியில் அவ்வப்போது மழை பெய்வதால் நெல் குவியல்கள் மழையில் நனைந்து வீணாகின்றன. ஈரமான இடத்தில் பலநாட்களாக கிடப்பதால் நெல்மணிகள் முளைக்க தொடங்கி உள்ளன.

காலையில் நெல்லை உலர்த்திவைப்பதும், மாலையில் நனைவதும் என்ற நிலை தொடர்வதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் செலவு செய்து விளைவித்த நெல்மணிகள் முளைத்து வீணாவதை பார்த்தால் கண்ணீர் வருகிறது. 40 நாட்கள் காத்திருப்பிற்கு பின்னரே நெல் கொள்முதல் செய்யபடுகிறது. 15 நாட்கள் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதால் நெல்லை கொள்முதல் நிலையத்தில் வைக்கவே இடம் இல்லை. நெல் கொள்முதல் தொகையை உரிய நேரத்தில் பெறமுடியாததால் விவசாயிகள் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம்.

வேறு வழி இன்றி தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே நெல் கொள்முதல்நிலையத்தில் தாமதம் இன்றி நெல் கொள்முதல் செய்யவும், நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story