வன விலங்குகளை வேட்டையாட வந்தவர்களின் நாட்டு துப்பாக்கி வெடித்து வனவர் உள்பட 2 பேர் காயம் மொரப்பூர் அருகே பரபரப்பு


வன விலங்குகளை வேட்டையாட வந்தவர்களின்  நாட்டு துப்பாக்கி வெடித்து வனவர்  உள்பட 2 பேர் காயம் மொரப்பூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 22 July 2021 5:31 PM GMT (Updated: 2021-07-22T23:01:15+05:30)

மொரப்பூர் அருகே மான் வேட்டைக்கு சென்றவரின் நாட்டு துப்பாக்கி வெடித்ததில் வனவர் மற்றும் வேட்டையாட வந்தவர் என 2 பேர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. நேற்று அதிகாலை நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மொரப்பூர்:

மான் வேட்டை
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மொரப்பூர் ஒன்றியம் பொம்மிடி, வேப்பிலைப்பட்டி, தென்கரைக்கோட்டை, பாஞ்சாலிநகர், கேத்துரெட்டிப்பட்டி, பூதநத்தம், கவரமலை காட்டுப்பகுதியில் காட்டுப்பன்றிகள், மான்கள், மயில்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகள் இரவு மற்றும் பகல் நேரங்களில் தண்ணீர் தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு வந்து செல்கின்றன.
இவற்றை வேட்டையாட மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிகின்றனர். இதை தடுக்க மொரப்பூர் வனச்சரகர் சிவகுமார் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அதிகாலை வனவர் வேடியப்பன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ராமியணஹள்ளி, பூதநத்தம், கவரமலை ஆகிய வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மொரப்பூர் அடுத்த நொச்சிக்குட்டை பகுதியை சேர்ந்த குமார் (வயது 45) மற்றும் அதே ஊரை சேர்ந்த முருகன் மகன் சக்திவேல் (22) ஆகியோர் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
நாட்டு துப்பாக்கி வெடித்தது
அப்போது நாட்டு துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்ததில் வனவர் வேடியப்பனுக்கு தலையிலும், வேட்டைக்கு வந்த குமாருக்கு தொடையிலும் காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டு இருவரும் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 
இந்நிலையில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற குமார் மற்றும் சக்திவேல் ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டு துப்பாக்கி வெடித்து வனவர் உள்பட 2 பேர் காயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story