ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்- வீராங்கனைகளை ஊக்குவிக்க ‘செல்பி ஸ்பாட்’ கலெக்டர் திவ்யதர்சினி திறந்து வைத்தார்


ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்- வீராங்கனைகளை ஊக்குவிக்க ‘செல்பி ஸ்பாட்’ கலெக்டர் திவ்யதர்சினி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 22 July 2021 11:05 PM IST (Updated: 22 July 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் ‘செல்பி ஸ்பாட்’-டை தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கலெக்டர் திவ்யதர்சினி திறந்து வைத்தார்.

தர்மபுரி:

ஒலிம்பிக் போட்டிகள்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் ‘செல்பி ஸ்பாட்’ அமைக்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் திவ்யதர்சினி நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு இளைஞர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தேவையான பயிற்சி மற்றும் ஊக்கத்தொகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர் மட்ட விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற ஆரோக்கிய ராஜீவ், சுபா வெங்கடேசன் ஆகியோர் உள்பட 11 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
ஊக்கத்தொகை
இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கி உள்ளார். வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வகையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்- வீராங்கனைகளும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகமும், விளையாட்டு துறையும் துணை நிற்கும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலாஜென்சுசீலா, துணை தாசில்தார் பாரதி, விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் கலந்துகொண்டனர்.

Next Story