திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.15 லட்சம் வரை தொழில் கடன்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 25 சதவீத மானியத்துடன் ரூ.15 லட்சம் வவை தொழில் கடன் வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மானியத்துடன் கடன்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில்கள் தொடங்கும் விதத்தில் 25 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தினை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்ததிட்டத்தின் மூலம் 18 வயதிற்கு மேற்பட்ட, 35 வயது வரையுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தகுதியுடையவராவர். சிறப்பு பிரிவினரான ஆதி திராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு வயது வரம்பு 45 வயது வரை தளர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தித் தொழில்களுக்கு அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ.15 லட்சமும், சேவை மற்றும் வியாபாரத் தொழில்களுக்கு அதிகப்பட்ச முதலீட்டுத் தொகை ரூ.5 லட்சமும் கடனுதவியாகப் பெறலாம். இக்கடனுக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2½ லட்சம் மானியமாக பெற்று பயன்பெறலாம்.
கொரோனா காரணமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் நேர்முகத்தேர்வின்றி நேரடியாக வங்கிக்கு பரிந்துரைக்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு திருப்பத்தூரில் இயங்கிவரும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story