கோவில் குருக்களை கத்தியை காட்டி மிரட்டி நகை, செல்போன்கள் பறித்த 2 பேர் கைது
குளித்தலை அருகே கோவில் குருக்களை கத்தியை காட்டி மிரட்டி நகை, செல்போன்கள் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை
கோவில் குருக்கள்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை பகுதியை சேர்ந்தவர் சோமுகுருக்கள் (வயது 60). கோவில் குருக்களாக வேலை பார்த்து வருகிறார். இவரது சகோதரி சித்ரா. இவர் கோவை கவுண்டம்பாளையம் நுகர்பொருள் வாணிப கழக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் ேசாமுகுருக்கள் தனது சகோதரி சித்ராவை குளித்தலை அடுத்த அய்யர்மலை அருகே உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (ஆடிட்டிங்) கணக்குகளை தணிக்கை செய்வதன் பொருட்டு காரில் அழைத்து வந்தார். பின்னர் தனது சகோதரியை இறக்கி விட்டு விட்டு சாலையோரம் காரை நிறுத்திவிட்டு காரின் பின்பக்க சீட்டில் சோமுகுருக்கள் அமர்ந்துள்ளார்.
நகை-செல்போன்கள் பறிப்பு
இந்தநிலையில் அங்கு வந்த 2 வாலிபர்கள் காரின் கண்ணாடியை கல்லால் உடைத்து கத்தியை காட்டி மிரட்டி சோமுகுருக்கள் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரம், கைகடிகாரம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்து கொண்டு தங்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து சோமுகுருக்கள் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, செல்போன்களை திருடி சென்ற 2 பேரையும் தேடிவந்தனர்.
தீவிர சோதனை
இந்தநிலையில் குளித்தலை-மணப்பாறை சாலையில் சில இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்துள்ளனர். அதில் நகை, செல்போன்களை திருடிச்சென்ற 2 நபர்களும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
2 பேர் கைது
அதன்படி நேற்று முன்தினம் குளித்தலை-முசிறி இடையே உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகத்துக்கு இடமான நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த தனபால் (32). குளித்தலை நமச்சிவாய நகர் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (32) என்பதும் அவர்கள்தான் சோமுகுருக்களை தாக்கி நகை, செல்போன்களை திருடியதும் தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் ஜீவானந்தம் தனபால் ஆகியோர் மீதும் குளித்தலை, சிந்தாமணிப்பட்டி, முசிறி, துறையூர், திருப்பூர், பல்லடம், உடுமலைப்பேட்டை, கோவை, மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடுதல், நகை பறிப்பு, லாரி, கார் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
மேலும் தனபால் மீது கொலை தொடர்பாக மண்ணச்சநல்லூர் பகுதியில் வழக்கும் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story