திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய ஒப்பந்த நர்சுகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய ஒப்பந்த நர்சுகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 23 July 2021 12:46 AM IST (Updated: 23 July 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய ஒப்பந்த நர்சுகள் தங்களை பணி நீட்டிப்பு செய்ய கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருச்சி,

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய ஒப்பந்த நர்சுகள் தங்களை பணி நீட்டிப்பு செய்ய கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஒப்பந்த நர்சுகள்

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டில் 3 மாத காலம் தற்காலிகமாக பணியாற்ற கடந்த மே மாதம் 7-ந் தேதி ஒப்பந்த அடிப்படையில் 24 நர்சுகள் பணியமர்த்தப்பட்டனர். இன்னும் ஒரு மாதம் பணி இருக்கும்போதே, 2 மாதங்களிலேயே, அதாவது கடந்த 7-ந் தேதி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட ஒப்பந்த நர்சுகள் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டர் சிவராசுவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பணி நீட்டிப்பு செய்ய கோரிக்கை

கொரோனா காலத்தில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் எங்கள் குடும்ப சூழ்நிலையும் மறந்து சிறப்பாக பணியாற்றினோம். ஆனால், தற்போது 2 மாத காலத்திலேயே எங்களை வேலையிலிருந்து நிறுத்திவிட்டனர். ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கு 6 மாத காலம் பணி நீட்டிப்பு செய்ய அறிவுறுத்தி உள்ளார்.

எங்களை தொடர்ந்து பணி நீட்டிப்பு செய்ய தாங்கள் ஆவன செய்ய வேண்டும். ஏற்கனவே நாங்கள் பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் பார்த்த பணிகளை உதறிவிட்டு தான் அரசு ஆஸ்பத்திரிக்கு தற்காலிக வேலைக்கு வந்தோம். இனி அங்கும் எங்களால் பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியமர்த்த வேண்டுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story